சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஜன.26-ம் தேதி (நாளை) குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய 4 நாட்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் குறித்து பேசுவர். மேலும், அந்தந்த கிராமத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகள், அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு, அதன் பின் அதற்கான நிதி ஒதுக் கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.
கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020 ஜனவரி 26-க்கு பிறகு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருந்தது. தெற்று பரவல் கொஞ்சம் குறைந்ததால் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அதுவும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த 9 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடத்தது. மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழகத்தில் தற்போது கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அத்துடன் உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை கடந் துள்ளது. இதனால், ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பிரவீன் பி நாயர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்று பரவலை கருத்தில்கொண்டு ஜன.26-ம் தேதி நடக்க வேண்டிய கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, கூட்டத்தை நடத்தாமல் இருப்பது குறித்து அனைத்து கிராமங்களுக்கும் உரிய வழிகாட்டுதல் களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.