விருப்ப மனு , நேர்காணல் நடத்துவது போன்ற நிகழ்வுகள் முடிந்தததையடுத்து மதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவிக்கவுள்ளார்.
தேமுதிக ம.ந.கூட்டணி- தமாகா அணியில் மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 29 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக சுமார் 50 பேர் சென்னை தாயகத்தில் நேற்று விருப்ப மனு அளித்தனர். அவர்களிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்றைய தினம் மாலை முதல் இரவு வரை நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணலின் போது 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வைகோ தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், சென்னை அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.காலனியில் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கும் வைகோ, மதிமுக போட்டியிடவுள்ள 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளார். மதிமுகவில் விருப்ப மனு அளிக்க ஆண்கள் ரூ. 25 ஆயிரமும், தனித் தொகுதிகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பெண்கள் விருப்ப மனுவுக்காக ரூ.10 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது மதிமுக நிர்வாகிகளை அதிருப்தியடைய வைத்ததாக கூறப்படுகிறது.