ஹாஜா முகைதீன் கிஸ்தி 
தமிழகம்

மழை பெய்தால் ஒழுகும் வாடகை கட்டிடத்தில் நீதிமன்றங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தில் தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்தம் 1,280 நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் சென்னை மாநகரில் 144 நீதிமன்றங்களும், பிற பகுதிகளில் 1,136 நீதிமன்றங்களும் உள்ளன. அந்தந்த காவல் நிலைய வரம்புக்கு உட்பட்ட குற்றவியல் வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும் 32 தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளன.

17 தொழிலாளர் நல நீதிமன்றங்கள், ஒரு தொழில் வழக்கு தீர்ப்பாயம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்ட நீதிமன்றங்கள், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் தொடர்பான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 13 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னையில் 2, மதுரையில் 1 என 3 சிறப்பு நீதிமன்றங்கள் அடங்கும்.

மேலும் குடும்ப நல நீதிமன்றங்கள், வைப்பீட்டுதாரர்கள் பாதுகாப்பு சட்ட நீதிமன்றங்கள், வங்கிகள் மற்றும் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், ஊழல் தடுப்புச் சட்ட நீதிமன்றங்கள், போதை மருந்து மற்றும் மன மயக்க பொருட்கள் தடுப்புச் சட்ட நீதிமன்றங்கள், அத்தியாவசியப் பொருட்கள் சட்ட நீதிமன்றங்கள், திருப்பத்தூரில் சந்தனக்கட்டை கடத்தல் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகின்றன.

9 இடங்களில் ரயில்வே குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களும், மோட்டார் வாகன சட்டத்துக்காக 12 நடமாடும் நீதிமன்றங்களும், பயங்கரவாத சீர்குலைவு தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க சென்னையில் 2 தனி நீதிமன்றங்களும், குண்டு வெடிப்பு மற்றும் பொடா சட்ட வழக்குகளை விசாரிக்க சென்னை பூந்தமல்லி மற்றும் கோவையில் 2 சிறப்பு நீதிமன்றங்களும் உள்ளன. தென் மாவட்ட இனக்கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரி்க்க மதுரையில் ஒரு கூடுதல் அமர்வு நீதிமன்றமும், எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் 3 சிறப்பு நீதிமன்றங்களும், சிபிசிஐடி, போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ளநோட்டு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களும், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 32 மகளிர் நீதிமன்றங்களும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 16 சிறப்பு நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. மேலும் திண்டுக்கல், தேனி, தருமபுரி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் இந்த நீதிமன்றங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக்காக 36 நீதிமன்றங்களும், நில அபகரிப்புக்காக 26 சிறப்பு நீதிமன்றங்களும் உள்ளன.

தற்போது 990 நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களிலும், 109 நீதிமன்றங்கள் அரசு கட்டிடங்களிலும், 87 நீதிமன்றங்கள் தனியார் வாடகை கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. சட்டத்தை நிலைநாட்ட இவ்வளவு நீதிமன்றங்கள் இயங்கி கொண்டிருந்தாலும் இவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக மேம்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.ஹாஜா முகைதீன் கிஸ்தி கூறும்போது, “நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு அவ்வப்போது அழுத்தம் கொடுத்து நிதியைப் பெற்று சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும் தேவையான வசதி, வாய்ப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த இக்கட்டான கரோனா காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டதன் காரணமாகவே விசாரணைகள் ஆன்லைன் வாயிலாக நடந்து வருகின்றன. ஆனால் பெரும்பாலான நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகின்றன.

கடந்த 2015-16 காலகட்டங்களில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.150 கோடி அப்போதைய தமிழக அரசின் அலட்சியத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோன்ற தவறை இந்த அரசும் செய்து விடக்கூடாது. தற்போது நடப்பு நிதியாண்டில் (2021-22) மத்திய அரசு ரூ. 35.66 கோடியை நீதித்துறைக்காக ஒதுக்கியுள்ளது. இந்த தொகை யானை பசிக்கு சோளப்பொறியாகத்தான் இருக்கும். இன்னும் அதிகரித்து வழங்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும். அதேநேரம் நடப்பாண்டில் தமிழக அரசும் நீதித்துறைக்கென மொத்தமாக ரூ. 1,713 கோடியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே முன்கூட்டியே திட்டமிட்டு நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

பல நீதிமன்றங்கள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளதால் வழக்கு ஆவணங்கள் சேதமடைந்து வருகின்றன. துர்நாற்றம் அடிக்காத நீதிமன்ற கழிப்பறை வசதிகளை வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் செய்து கொடுக்க வேண்டும். நீதிமன்றங்களின் சேவை பொது மக்களுக்கு தடையின்றி சென்றடைய மத்திய, மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT