தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ விசாரணை ஆணையத்தில்: போக்குவரத்து கூடுதல் ஆணையர் சாட்சியம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், மாதந்தோறும் விசாரணை நடத்திவருகிறது.

ஏற்கெனவே, 34 கட்ட விசாரணை முடிவடைந்து, 1,037 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை தூத்துக்குடியில், ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க, சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று அப்போதைய நெல்லை சரக டிஐஜியும், தற்போதைய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையருமான கபில்குமார் சரத்கர், ஆணையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த விசாரணையில், அப்போதைய தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், அப்போதைய தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் ஆஜராகி சாட்சியம் அளிக்கின்றனர்.

SCROLL FOR NEXT