தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வில் பெண் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர். 
தமிழகம்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் பிறப்பு குறைந்து வருவது கவலை அளிக்கிறது: அரசு விழாவில் புள்ளி விவரங்களை வெளியிட்டு கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆதங்கம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 8.78 சதவீதமாக குறைந்திருப்பது கவலை அளிப்பதாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டார். அப்போது அவர் பெண் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்வில் பேசிய ஆட்சியர், “கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய அளவில் சராசரி பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.03 ஆக இருந்தது. 2016, 2017-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் 9.54 ஆக இருந்த விகிதம், தற்போது 8.78 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 2020 - 21-ம் ஆண்டிற்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் விவரங்களின்படி, இந்தியாவின் குழந்தைப்பேறு விகிதம் குறைந்திருப்பதால், நாட்டின் மக்கள் தொகை இனிவரும் காலங்களில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய குடும்ப நல அமைப்பின் தற்போதைய கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் 878 ஆக குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய அளவில் சராசரி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 9.03 ஆக இருந்தபோது, தமிழகத்தின் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.35 ஆக இருந்தது. 2010-ம் ஆண்டில் தேசிய அளவில் அது 8.57 ஆக குறைந்த நிலையில், தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.35 என்ற அளவிலேயே நீடித்தது. அதன்பின், தமிழகத்தில் படிப்படியாக குறையத் தொடங்கிய இந்த விகிதம், தற்போது, 8.78 என்ற அளவிற்கு குறைந்திருப்பது கவலையளிக்க கூடியதாக உள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் பெண் குழந்தைகளை பிறப்பிலிருந்தே போற்றி பாதுகாக்க வேண்டும். ஆண் வாரிசுக்கு சமமாக பெண் குழந்தைகளையும் நினைக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்க செய்து, பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆட்சியர் ஸ்ரீதர், “ தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் இந்த சமூகத்திற்கான பரிசு. அந்த பெண் குழந்தைகளுக்கு இந்த நிகழ்வில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT