தமிழகம்

மின்துறை அமைச்சரையே காணவில்லை: பாலபாரதி எம்எல்ஏ பேச்சு

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சரை காணவில்லை என மக்கள் நலக் கூட்டணிக் கட்சியின் எம்எல்ஏ கே.பாலபாரதி பேசினார்.

திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கே.பாலபாரதி எம்எல்ஏ பேசியது:

தமிழக மக்கள் முன் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சினையாக உள்ளது. துவரம் பருப்பு ஒரு கிலோ 200 ரூபாய்க்கு அதிமுக ஆட்சியில் விற்கிறது. 40 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு திமுக ஆட்சியில் 80 ரூபாய்க்கு விற்றது. துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த திமுக, அதிமுக அல்லாத தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். நாங்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தோம் என்று திமுகவினரும், நாங்கள் இலவசமாக அரிசி கொடுக்கிறோம் என அதிமுகவினரும் கூறுகின்றனர்.

அது உண்மைதான். ஆனால் 200 ரூபாய் கொடுத்துதான் துவரம் பருப்பு வாங்க முடிகிறது. இதை அவர்கள் கூறுவதில்லை. திமுக, அதிமுக ஆட்சிகளில் துவரம் பருப்பு விலை விண்ணை நோக்கி பறக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் உள்ளது.

தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 5 தலைவர்களிடம் உள்ள ஒற்றுமையே அவர்கள் அரசியலில் நேர்மையானவர்கள், சுத்தமானவர்கள் என்பதுதான்.

மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன். அவர் இப்பொழுது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. தமிழ கத்தில் மின்சாரம் பல நாட்கள் காணாமல் போயிருந்தது. இப்போது மின்துறை அமைச்சரே காணாமல் போய்விட்டார் என்றார்.

SCROLL FOR NEXT