தமிழகம்

வெப்பத்தால் அதிகரிக்கும் விபத்துகளை தடுப்பது எப்படி? - தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்

கி.மகாராஜன்

கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக டயர்கள், பெட்ரோல் டாங்க் வெடிப்பதால் நிகழும் விபத்துகளை தவிர்ப்பது தொடர்பாக மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிகளவு வெயில் அடித்து வருகிறது. பொது மக்களின் நடமாட்டம் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வெயில் காலத்தில் வாகன பயணமும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. ஏனெனில் கடுமையான வெப்பம் காரணமாக வாகனங்களின் டயர்கள், பெட்ரோல் டாங்க், என்ஜின் சூடேறி வெடிப்பதால் விபத்துகள் நடைபெறுவது தற்போது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் 4,89,400 விபத்துகள் நடைபெற்றன. இதில் கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 1,70,243 விபத்துகள் நடைபெற்றன. இதில் 50,284 பேர் உயிரிழந்தனர். 1,62,947 பேர் காய மடைந்தனர். குறிப்பாக வெயில் கடுமையாக இருக்கும் மே மாதத்தில் மட்டும் 45,404 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 13,940 ஆகும். வெயில் கால விபத்துகளை தவிர்ப்பது தொடர்பாக மதுரை மைய வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சூடான சாலையில் காற்றழுத்தம் அதிகமாக உள்ள டயர் உராயும் போது காற்றில் உள்ள மூலக்கூறுகள் விரிவடைந்து டயர்கள் வெடிக்கின் றன. காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது சாலை வெப்பத்தால் டயர் பட்டன்கள் விரைவில் தேய்ந்து வெடிக்கிறது. இதனால் டயர்களில் காற்றழுத்தம் சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

நல்ல நிலையில் உள்ள டயர் களை மட்டும் பயன்படுத்த வேண்டும். நூல் தெரியுமளவு இருந்தாலோ, பட்டன் இல்லாமல் இருந் தாலோ அந்த டயர்களை பயன்படுத் தக்கூடாது. வெயில் காலத்தில் வாகனங்களை அதிக வேகமாக இயக்குவதும், அதிக தூரம் இயக்கு வதும் ஆபத்தானது. காலை, மாலை யில் வாகனங்களை இயக்குவது நல்லது. டயர்களில் காற்று நிரப் பும்போது சாதாரண காற்றைவிட நைட்ரஜன் (என்2) காற்றை நிரப்ப லாம். நைட்ரஜன் காற்று சாதாரண காற்றைவிட எளிதில் வெப்பமாவ தும், ஆவியாவதும் இல்லை.

வெயில் காலத்தில் என்ஜின் அதிகமாக சூடாகும். அப்போது ரேடியேட்டரில் நீர் விரைவில் ஆவி யாகி காலியாகும். அதிக சூடு காரணமாக என்ஜின் செயலிழக்கும். இதனால் ரேடியேட்டரில் நீருக்குப் பதிலாக ‘கூலண்ட்’ ஊற்றி வெப் பத்தை குறைக்கலாம். பெட்ரோல்/ டீசல் முழுவதும் நிரப்பக்கூடாது. எரிபொருள் மூலக்கூறுகள் விரிவடைந்து வெடித்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. எரிபொருள் நிரப் பும்போது என்ஜினை நிறுத்திவிட வேண்டும்.

முக்கியமாக செல்போன்களை பெட்ரோல் டாங்க் கவரில் வைக் கக்கூடாது. செல்போன் சூடாகி பேட் டரி மற்றும் காற்றலையால் வரும் கதிர்வீச்சு காரணமாக தீ விபத்து நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வானிலை தட்பவெப்பநிலை, சாலையின் தன்மைக்கேற்ப வாகனத்தை நல்ல முறையில் பராமரித்து, மனிதாபி மானத்துடன் நடந்து கொள்ளும் போது விபத்துகள் குறையும் என்றார்.

கதர் ஆடை, கூலிங் கிளாஸ்

ஜெ.கே.பாஸ்கரன் மேலும் கூறியதாவது: ஓட்டுநர்கள் கண்களைப் பாதுகாக்க கூலிங் கிளாஸ். கதர் ஆடைகளை அணிந்து காற்றோட்டமான சூழலில் வாகனங்களை இயக்க வேண்டும். நீர்சத்துள்ள பழங்களை உண்ண வேண்டும். பான்பராக், மதுப்பழக்கம், பீடா, புகையிலை, புகைப்பழக்கம் போன்ற போதை வஸ்துகளை உட்கொள்ளக் கூடாது. இவற்றை உட்கொள்வதால் ஏற்படும் மயக்கநிலை விபத்தை அதிகரிக்கும். எளிதில் தீப்பிடிக்கும் வாகனங்களை பகலில் இயக்குவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இலகுரக பயணிகள் வாகனங்களை மதிய நேரத்தில் இயக்கக்கூடாது. இந்த வாகனங்களில் அதிக நேரம் ஏசி இயங்குவதால் எரிபொருள் செலவுகள் அதிகமாகும். அடிக்கடி பிரேக் போடும்போது சூடான சாலையில் டயர் உராயும்போது விபத்து நிகழும் என்றார்.

SCROLL FOR NEXT