தமிழகம்

வருடாந்திர தேர்வுக் கால அட்டவணை வெளியீடு; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு 9,494 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் தேர்வு: ஏப்ரல் 2-வது வாரத்தில் தகுதி தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் 2022-ம்ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு9,494 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2-வது வாரம் நடத்தப்பட உள்ளது.

2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.

அதன்படி, இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9,494 ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்பட்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் தேர்வு நடத்தப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் 4,989 காலி இடங்களை நிரப்புவதற்காக மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் 2-வது வாரத்தில் போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 167 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் 2-வது வாரத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 493 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டு, நவம்பர் 2-வது வாரத்தில் அதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இளைஞர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக இந்த வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை உதவும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஜி.லதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT