மதுரை: மதுரையில் பணியில் இருந்தபோது பெண் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகில் உள்ள வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் தெய்வராஜ். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணி புரிகிறார். இவரது மனைவி கலாவதி(40). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.
கலாவதி மதுரை எஸ்எஸ். காலனி காவல் நிலையத்தில் உதவி எழுத்தராகப் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, இவருக்கு இதயவலி ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் இரவு10.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் வல்லாளப்பட்டிக்கு கொண்டு சென்று அங்கு காவல் துறை மரியாதையுடன் நேற்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு உரிய சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.