தமிழகம்

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வரும் 9-ம் தேதி பிரச்சாரம் தொடக்கம்: மே 12 வரை 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறார். அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம், புதுச்சேரியில் 15 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 9-ம் தேதி முதல், மே 12-ம் தேதி வரை அதிமுக வேட்பாளர்கள், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தனது பிரச்சாரத்தை சென்னையில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறார். சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 21 தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சென்னையில் அன்று பிரச்சாரம் செய்கிறார். பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து விருத்தாசலத்தில் 11-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார்.

கிருஷ்ணகிரி, தருமபுரி வேட்பாளர்களை ஆதரித்து தரும புரியில் 13-ம் தேதியும், விருதுநகர், ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் 15-ம் தேதியும், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரத்தில் 18-ம் தேதியும் பிரச்சாரம் செய்கிறார்.

சேலம், நாமக்கல் வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் 20-ம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 23-ம் தேதி, தேனி, திண்டுக்கல், மதுரை வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் 27-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார்.

கோவை, நீலகிரி, திருப்பூர் வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் மே 1-ம் தேதி, விழுப்புரம், திருவண்ணாமலை வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் 3-ம் தேதி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பெருந்துறையில் 5-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

8-ம் தேதி தஞ்சையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், தஞ்சை, திருவாரூர் மாவட்ட தொகுதிகளின் வேட்பாளர்களையும், 10-ம் தேதி நெல்லையில் நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளின் வேட்பாளர்களையும், 12-ம் தேதி வேலூரில் திருவண்ணா மலை, வேலூர் மாவட்ட வேட் பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதற்கிடையில், வரும் ஏப்ரல் 25-ம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT