கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அடுத்த வன்னியபுரம் கிராமத்தில் மாநாற்றுகள் வைக்க பயன்படும் மண்தொட்டிகள் தயாரித்து உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட பெண் தொழிலாளர். 
தமிழகம்

பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து மண் தொட்டியில் நாற்றுகளை வளர்க்க வேண்டும்: கிருஷ்ணகிரி மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள்

எஸ்.கே.ரமேஷ்

பிளாஸ்டிக் கவர்களில் நாற்றுகளை வளர்ப்பதை தவிர்த்து, மண் தொட்டிகளில் நாற்றுகளை வளர்க்க வலியுறுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப் பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொட்டிகள் விற்பனை பாதிப்பு

இதேபோல, மா ஓட்டு செடி உற்பத்தி மற்றும் நாற்றுச் செடிகள் உற்பத்தியை நம்பி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் பலர் நாற்றுகள் வைக்க பயன்படுத்தும் மண் தொட்டிகளை அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர்களில் நாற்று களும், மாங்கன்றுகளும் வைத்து வளர்த்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை ஒருபுறமும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது ஒரு புறமும் இருந்தாலும், நாற்றுகள் பிளாஸ்டிக் கவர்களில் வளர்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாற்றுகள் வளர்க்க தயார் செய்யும் மண் தொட்டிகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

குறையும் பயன்பாடு

இதுதொடர்பாக சந்தூர் அடுத்த வன்னியபுரத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:

சந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாங்கொட்டைகள் பதியம் போடப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு வளர்ந்தவுடன் வேருடன் எடுக்கப்படும் மாநாற்றுகள் மண் தொட்டியில் வைத்து வளர்க்கப்படுகிறது. பின்னர், மண்தொட்டியில் உள்ள செடிகளை கொண்டு, ஏற்கெனவே நன்கு வளர்ந்துள்ள தாய் செடியில் உள்ள கிளைகளை சீவி கயிற்றால் கட்டி மாங்கன்றுகள் உற்பத்தி செய்கின்றனர்.

இதனால் மண்தொட்டிகளின் பயன்பாடு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மண் தொட்டிகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நாற்றுகள் வைக்க பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மண் தொட்டிகள் பயன்படுத்துவது படிபடியாக குறைந்து வருகிறது. இதனால் எங்களுக்கு விற்பனை, வேலைவாய்ப்பு குறைந்து வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு டிராக்டர் லோடு களிமண் ரூ.5 ஆயிரத்துக்கு வாங்கி, அதில் அதிகபட்சம் 5 ஆயிரம் சிறிய தொட்டிகள் தயாரிக்கிறோம். மண் தொட்டிகள் சுடுவதற்கு ரூ.2 ஆயிரத்துக்கு தென்னை பட்டைகள் வாங்கப்படுகிறது. ஒரு தொட்டி ரூ.6-க்கு விற்பனை செய்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தி வளர்க்கப்படும் மாங்கன்றுகள் உள்ளிட்டவை நிலத்தில் நடவு செய்யப்படும் போது, கவர் தனியாக எடுத்து வீசுவதால், அவை மண்ணில் மக்குவது இல்லை. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

ஆனால், மண் தொட்டிகள் உடைந்து போனாலும், அவை மண்ணோடு மண்ணாக கலந்து விடுகிறது. எனவே, தோட்டக்கலைத்துறையினர் மற்றும் நாற்று விற்பனை செய்யும் விவசாயிகள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு, மண் தொட்டிகளை பயன்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT