திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டையில் விரைவு ரயிலில் சிக்கிய மோட்டார் சைக்கிள். 
தமிழகம்

திருவள்ளூர் அருகே விரைவு ரயிலில் சிக்கிய மோட்டார் சைக்கிள்: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விரைவு ரயிலில் மோட்டார் சைக்கிள் சிக்கி, 3 கிமீ தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 8.55 மணிக்கு ஆலப்புழாவுக்கு புறப்பட்டது ஆலப்புழா விரைவு ரயில்.

அந்த ரயில், சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ரயில்வே கேட்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு விரைவு ரயில் வருவதை அறியாத நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளார். திடீரென விரைவு ரயில் அருகில் வந்ததால்அதிர்ச்சியடைந்த அந்த நபர்,மோட்டார் சைக்கிளை தண்டவாளத்தில் விட்டுவிட்டு ஓடியுள்ளார்.

இதனால், ரயிலில் சிக்கிய அந்த மோட்டார் சைக்கிள், சுமார் 3 கிமீ தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. பிறகு, புட்லூர் ரயில் நிலையத்தில் ரயில் செல்லும்போது ரயில் என்ஜின் பகுதியில் உராயும் சத்தம் வந்ததையடுத்து, ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, என்ஜின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், சேர்ந்து ரயில் இன்ஜின் அடிப் பகுதியில் சிக்கி நசுங்கி இருந்த மோட்டார் சைக்கிளை, சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.

இதனால், ஆலப்புழா விரைவுரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புட்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள திருவள்ளூர் ரயில்வே போலீஸார், விரைவு ரயில் வரும்போது தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை விட்டுச் சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT