சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்த தாமதமான முடிவுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''அதிமுக, திமுக இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது மனநிறைவைத் தருகிறது. கடந்த ஜனவரி மாதத்திலேயே இந்தக் கூட்டணியில் இணையுமாறு வைகோ உள்ளிட்ட தலைவர்கள் என்னைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர். உடனடியாக எந்த முடிவும் எடுக்கும் சூழல் இல்லாததால் மக்கள் நலக் கூட்டணியில் இணைய முடியவில்லை.
தாமதமாக சென்றாலும் எங்களுக்கு 26 தொகுதிகளை கடைசி நேரத்தில் ஒதுக்கினர். இதற்காக கூட்டணி தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள் என்றாலே அனைத்து இடங்களிலும் போட்டியிடவே விரும்புவார்கள். கூட்டணி என்றால் சில இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். இதில் வருத்தம் ஏற்படும் இயற்கையானதுதான்.
தமாகா தொகுதிகளில் மட்டுமல்ல அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைப்போம். தமாகாவில் இருந்து விலகியவர்கள் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இன்னும் ஓரிரு நாளில் தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 20-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறேன்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.