சென்னை: தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிட முடியுமா? என்று நடிகையும் பாஜக தேசிய குழு உறுப்பினருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு நீதி கேட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, "ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைகளை இழந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் வலி தெரியும். திமுகவினருக்கு அது தெரியாது. அவர்கள் அரசியல் மட்டும்தான் செய்வர்.
மாணவி தற்கொலை விவகாரத்தில் முதல்வர் இதுவரை மவுனம் காப்பது ஏன்,தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிட முடியுமா?.
எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும். காவல்துறையிடம் ஆதாரங்கள் இருந்தும், ஏன் இப்படி பயந்துகொண்டு பணியாற்றுகின்றனர் என்பது தெரியவில்லை.
இதுபோன்ற விஷயங்களில் பின்வாங்கி காவல்துறையினர் தங்களது நல்ல பெயரை கெடுத்துக் கொள்கின்றனர்" எனத் தெரிவித்தார்.