வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதிப்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை பொன்னைய்ய ராஜபுரம் பகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற நமோ பொங்கல் விழாவில் கலந்துகொண்டபின் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று அதிகமாக இருக்கும் மாநிலங்களில்கூட வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் தை பூச விழாவுக்கு கூட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியுடன் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வர மக்களால் முடியும். எனவே, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதிப்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
நடவடிக்கை எப்போது?
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் தவறு நடக்கவே இல்லை என்று முதலில் சொன்னவர்கள், இப்போது தவறு நடந்து இருக்கிறது, நடவடிக்கைகள் எடுப்போம் என சொல்கின்றனர். இதற்கு காரணமான அமைச்சர், அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?.
மாநிலத்தில் பணியில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விரும்பினால் கூட மத்திய பணிக்கு செல்ல விடாமல் மாநில அரசுகள் நிர்ப்பந்தம் செய்கின்றன. அவர்கள் மத்திய அரசு பணிக்குச் செல்ல மாநில அரசுகள் அனுமதி கொடுப்பதில்லை.
இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது மத்திய அரசு விதியை கொண்டு வந்து செயல்படுத்துகிறது. அரியலூர் சிறுமியின் மரணத்தை பொருத்தவரை, 2 ஆண்டுகளாக நடந்த விஷயங்களை மரண வாக்குமூலமாக அவர் சொல்லி இருக்கிறார் என்றார்.
அப்போது, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், கட்சியின் மாநில துணை தலைவர் கனகசபாபதி, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.