தமிழகம்

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

இப்பள்ளியில் நடந்த கட்டாய மதமாற்ற முயற்சிகள், பிற கொடுமைகளால் 17 வயதான அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு காரணம் மதமாற்ற முயற்சிகள் என்பதையும், தனக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு மாணவியின் மரண வாக்குமூலம் ஆகும். இந்த வழக்கில் நியாயமான, நேர்மையான விசாரணையை முன்னெடுக்க வேண்டிய தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், "மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று விசாரணை தொடங்குவதற்கு முன்பே பேட்டி அளித்துள்ளார். எனவே, அவரை இந்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழக முதலமைச்சரோ, அவரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையோ இந்த வழக்கை நேர்மையாக கையாள மாட்டார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT