தவறு செய்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக அமைக்கப் பட்டுள்ள 200 படுக்கைகள், கோவைரோட்டரி டெக்சிட்டி சார்பில் அமைக்கப்பட்ட, நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் ஆகியவற்றை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திறந்துவைத்தார்.
அப்போது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெறு வது பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சியினர் கூறி வருவதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, ‘‘திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தேர்தல் வாக்குறுதிதான். தேர்தல் வாக்குறுதியைத்தான் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. தாங்கள் தவறு செய்யாதவர்கள் எனில் அதை சட்டத்தின் முன்பு நிரூபிக்கலாம். தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை’’ என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மருத்துவமனை டீன் எம்.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.