தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ. 57.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா, கோளரங்கம் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினர்கள்எம்.சி. சண்முகையா, ஜீ.வி. மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
தூத்துக்குடி தமிழ்ச்சாலை பகுதியில் ரூ. 9.76 கோடி மதிப்பீட்டில் 9,135 சதுர மீட்டர் பரப்பளவில் போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா,மானுடவியல் பூங்கா மற்றும் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறியீடு அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 90 சதுரமீட்டர் பரப்பளவில் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பூங்காவில், கோளரங்கம் 4-டி காணொலி, 5.1 ஆடியோமற்றும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மானுடவியல் பூங்காவில்இந்தியாவில் வாழ்ந்த 12 பூர்வகுடி இன மக்களின் கலாச்சாரம், தொழில்,வாழ்வியல் முறைகளும், ஐந்திணை நிலஅமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட் டுள்ளன.
நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில்,தருவைகுளம் பகுதியில் ரூ.35.84 கோடிமதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்புநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு விதிகளின்படி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து 25 சதவீதம் சொந்த உபயோகத்துக்கும், மீதமுள்ள கழிவுநீரை தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீளவிட்டான் பகுதியில் 135 ஏக்கர்பரப்பளவில், 67.45 மில்லியன் கன அடி கொள்ளளவில் சி.வ.குளம்மேம்படுத்தும் பணி ரூ.11.50 கோடிமதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குளத்தை ஆழப்படுத்தி, அதிலிருந்து கிடைக்கும் மண்ணை, உபயோகித்து கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தகுளத்தில் மழைக்காலங்களில் சேகரிக்கப்படும் நீரின் மூலம் குளத்தின் நீர்ப்பிடிப்பு பரப்பளவை அதிகப்படுத்தி,குடிநீர் ஆதாரங்களை பெருக்கவழிவகை செய்யப்பட்டுள்ளது. குளத்தின் கரையை 6 மீட்டர் அகலத்துக்கு மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குளத்துக்குள் சிறு சிறு மண்குன்றுகள் அமைத்து, அதில் மரங்கள் வளர்த்து எதிர்காலத்தில் பறவைகள் சரணாலயம் அமைய வாய்ப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது, என்றார் அவர்.