தமிழகம்

உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துகளை பெற மகளுக்கு முழு உரிமை: மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உயில் எழுதாத தந்தையின் சுய சம்பாத்தியம் மற்றும் பரம்பரை சொத்துகளை பெற வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கு முழு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தையின் சுய சம்பாத்தியம் மற்றும் பரம்பரை சொத்துகளை பெற தந்தை உயில் எழுதாத நிலையில், அந்த சொத்தில் பங்கு கோரி மகள்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரிஅமர்வில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்து வாரிசு உரிமை சட்டப்படி, தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது குடும்ப பாகப் பிரிவினை மூலமாக கிடைத்தபரம்பரை சொத்தில் பங்கு பெற, வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் முழு உரிமை உள்ளது.

காலமான தந்தையின் சகோதரர்களுடைய வாரிசுதாரர்கள் உள்ளிட்ட மற்ற குடும்ப இணை உறுப்பினர்களைவிட, இந்து வாரிசு உரிமை சட்டத்தின் கீழ், தந்தையின்நேரடி வாரிசான மகள்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த வழக்கு, இந்து பெண்கள்,விதவைப் பெண்களின் சொத்துரிமையுடன் தொடர்புடையது. இறந்த தந்தை உயில் எழுதி வைக்கவில்லை என்பதற்காக, அவர்களது சொத்துரிமையை மறுக்க முடியாது. தந்தையின் சொத்து மகள்களுக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர, சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லை என்று கூறி, அதை வேறு யாருக்கும் வழங்க முடியாது. ஒரு விதவை அல்லது மகளுக்கு தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது கூட்டுச் சொத்தைபிரிப்பதன் மூலம் பெறப்பட்ட பங்கை மரபுரிமையாக பெறுவதற்கான உரிமை என்பது பழைய பாரம்பரிய இந்து சட்டத்தின் கீழ் மட்டுமல்லாது பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வாயிலாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT