தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பள்ளி விடுதியில் அறைகளை சுத்தம் செய்யக் கூறியதாக மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் உடலைப் பெற பெற்றோர் மறுத்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஒரு மாணவி, பள்ளி அருகே அவர் தங்கியுள்ள விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறி விஷம்குடித்தார். பின்னர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன்இன்றி கடந்த 19-ம் தேதி உயிர்இழந்தார்.
இதுதொடர்பாக, சிகிச்சையின்போது மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து, வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்.
இதற்கிடையே, தன்னை பள்ளிநிர்வாகத்தினர் மதம் மாற்ற முயற்சித்ததாக அந்த மாணவி தெரிவிப்பதுபோல, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தஞ்சாவூர் எஸ்பி-யிடம் மாணவியின் தந்தை அளித்த புகாரில், “எனது மகளைகிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அவரை திட்டி, அதிகமாக வேலை வாங்கியதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே, பள்ளிநிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் வைக்கப்பட்டுஉள்ள மாணவியின் உடலைப் பெறஅவரது பெற்றோர் நேற்று வரைவரவில்லை. இதுகுறித்து, மாணவியின் உறவினர்கள் கூறியபோது, “பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்வோம்” என தெரிவித்தனர்.
மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம்
இதற்கிடையே, தஞ்சாவூர் எஸ்பி ரவளிப்ரியா செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் இரவு கூறியது: சிகிச்சையில் இருந்த மாணவியிடம் மருத்துவர்களின் அனுமதியுடன் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றபோது, மதமாற்றம் தொடர்பாக எந்தவிதத் தகவலையும் மாணவிதெரிவிக்கவில்லை. அதேபோல, அவரது பெற்றோரும் சொல்லவில்லை. எனவே, எப்ஐஆரில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை.
அதன் பிறகு மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் மதமாற்றம் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இதற்கிடையே, அந்த மாணவிசிகிச்சையில் இருக்கும்போது பேசுவதுபோல சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது சிறார் சட்டப்படி குற்றம். இந்த வீடியோவை எடுத்தது யார்? பரப்பியது யார் என்பது குறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்றார்.