சிதம்பரத்தில் 9 வது நாளாகராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்கு மாதந்திர ஊக்கத் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் ஊக்கத் தொகையாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ. 25 ஆயிரத்தை தங்களுக்கும் வழங்க வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நேற்று 9 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோருடன் பயிற்சி மருத்துவர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த சென்னையில் இன்று(ஜன.22) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.