தமிழகம்

தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டி: ராஜபாளையம் மாணவிக்கு 3-வது பரிசு

செய்திப்பிரிவு

விருதுநகர்: மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில், தேசிய அளவில் நடைபெற்ற கலா உத்சவ் போட்டிகளில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாணவி 3-வது பரிசை பெற்றுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் ஆண்டுதோறும் கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் வட்டார, மாவட்ட, மாநில அளவில் படிப்படியாக தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

கடந்த நவம்பரில் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் ஜன. 5, 6 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற போட்டியில் சென்னையிலிருந்து பங்கேற்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் பரிசுகளை வென்றனர். ‘உள்ளூர் பொம்மைகள் - விளையாட்டுகள்’ என்ற தலைப்பில் சிறந்த படைப்புகளை தயாரித்து காட்சிப்படுத்திய விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி சரண்யா 3-வது பரிசை வென்றார்.

வெற்றிபெற்ற மாணவி சரண்யாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT