புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் உள்ள நடமாடும் ரத்ததான ஊர்தியில் இருந்த ஹிந்தியை நீக்கி மீண்டும் தமிழ் இடம் பிடித்துள்ளது.  
தமிழகம்

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ரத்த தான ஊர்தியில் இந்தியை நீக்கி மீண்டும் தமிழ்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் உள்ள நடமாடும் ரத்த தான ஊர்தியில் இருந்த இந்தியை நீக்கி மீண்டும் தமிழ் இடம்பிடித்துள்ளது.

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் நடமாடும் ரத்த தான ஊர்தி உள்ளது. இந்த ஊர்தியில் ரத்த தானம் செய்வதற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரத்த தான ஊர்தி புதுப்பிப்பதற்காக ஹைதராபாத் சென்று தற்போது புதுச்சேரி திரும்பியுள்ளது. இந்த வாகனத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அறியும் வகையில் ரத்த தானம் உயிர் தானம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த தமிழ் வாசகங்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இந்தி வாசகங்கள் சேர்க்கப்பட்டன.

இதுதொடர்பான செய்தி இந்து தமிழ் திசை இணையத்தில் வெளியானது. தமிழ் வாசகங்களை முற்றிலும் அகற்றியது கண்டனத்துக்கு உரியது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தினர் தமிழ் தமிழ் வாசகங்களை ஸ்டிக்கரில் தனியாக ஒட்டியிருந்தாலும், வாகனத்தில் இருந்த வாசகங்களில் முன்பு தமிழில் இருந்ததை அகற்றி இந்தியில் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, தமிழில் வாசகங்களை எழுத உத்தரவிட்டார். இன்று ரத்ததான ஊர்தியில் இருந்த இந்தி வாசகங்கள் நீக்கப்பட்டு மீண்டும் தமிழ் இடம்பிடித்தது.

"ரத்த தானம் உயிர் தானம்" என்ற வாசகங்கள் தொடங்கி, ஊர்தியில் இந்தி வாசகங்கள் புதிதாக எழுதப்பட்ட பகுதிகளில் எல்லாமல் தமிழ் வாசகங்களே மீண்டும் எழுதியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT