தமிழகம்

பணிச்சுமை காரணமாக கட்சிப் பொறுப்பில் இருந்து விலகல்: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் கடமைகளுடன், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணிகளையும் ஒருசேர கவனிப்பது கடினமாக இருந்ததால் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகியதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "2017ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆரம்பத் திட்டம் கூட இல்லாத நிலையிலிருந்து இன்று தனித்துவம் மிக்க வலுவான ஒரு அணியைக் கட்டமைத்து வழிநடத்திய ஒருவராய் நான் என்றுமே திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஓர் அங்கமாகவே இருப்பேன்.

பல ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளில், பல துறைகளில் நான் நல்ல மாற்றத்துக்கான காரணமாகவே இருந்துள்ளேன். மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. மாற்றத்தை ஊக்குவிக்கும் நபர்களே எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை என் வாழ்வின் ஆரம்பக் காலங்களில் இருந்தே உணர்ந்திருக்கிறேன். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில் பணிபுரிந்து பல சாதனைகளைப் படைத்த போதிலும், நம் அணியின் முன்னேற்றம் என்ற சாதனைதான் எனக்கு மிகப்பெரிய மனநிறைவையும், பெருமையையும் அளித்துள்ளது. அதற்காகவும் தங்களின் தொடர் உழைப்புக்காகவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த சில மாதங்களாக, ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் நான் ஆற்ற வேண்டிய கடமைகளுடன், நான் மேற்கொள்ள வேண்டிய தகவல் தொழில்நுட்ப அணியின் பணிகளையும் ஒருசேர கவனிப்பது கடினமாக இருந்தது. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, நம் மாநிலத்தின் நிதிநிலை வெகுவேகமாக சீரழிந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

உண்மையில் பொது நிர்வாகமும் அதற்கு இணையாகப் பெரும் சீர்கேடுகளைச் சந்தித்தது. இந்தச் சூழ்நிலையில் நமது முதல்வரின் சிறந்த வழிகாட்டுதலின் பலனாக, எங்கள் முழு கவனத்தையும், திறன்களையும் பயன்படுத்தி இந்த நிலைமையைப் பெருமளவில் சரிசெய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற சூழலில் நிர்வாக ரீதியாக நான் ஆற்ற வேண்டிய கடமையின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக இருந்தது. முழு அர்ப்பணிப்புடன் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழலில் பெருமைக்காகப் பதவிகளில் ஒட்டிக்கொள்வது எனது இயல்பு அல்ல என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். அதன் பொருட்டு, தலைவரிடம் என் பொறுப்பு விலகல் கடிதத்தை வழங்கினேன். அவரும் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக் கொண்டார்.

ஒருவருடைய வாழ்வின் உண்மையான மதிப்பு அவர் மறைந்த பிறகே உணரப்படுகிறது என்ற உண்மையை 2006இல் என் தந்தையின் இறுதிச் சடங்கில் நான் அறிந்துகொண்டேன். அதுபோல இந்த அணியை மேம்படுத்துவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலன்களை, டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏவின் புதிய தலைமையின் கீழ் எவ்வளவு சிறப்பாக அணி செயல்படுகிறது என்பதை வைத்து மதிப்பிட்டு விடலாம். அவருடன் இணைந்து பணியாற்றி நம் அணியை மென்மேலும் வளர்ச்சியடையச் செய்யுமாறு உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

பதவி, அலுவல் ஆகியவற்றை ஒரு இயக்கத்தின் மீதான அர்ப்பணிப்புடன் நாம் பொருந்திப் பார்க்கக்கூடாது. பணம், பதவி, பொறுப்பு போன்றவை மாற்றத்திற்கு உட்பட்டவை. ஒருவரின் வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் அவை வந்துபோகும் தன்மை கொண்டவை. திராவிடக் கொள்கையின் மீது நான் கொண்ட பற்றானது, கழகப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்பு போன்ற அனைத்துப் பொறுப்புகளுக்கும் அப்பாற்பட்டது. திராவிடக் கொள்கையை வலுப்படுத்த பதவிகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் அந்தப் பணியில் நம்மை அர்ப்பணித்துக்கொண்டு, மற்றுமொரு நூற்றாண்டுக்கான அரசியலை உருவாக்கத் தொடர்ந்து உழைப்போம்" என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT