புதுச்சேரி: யூனியன் பிரதேச மின்துறைகள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து வரும் பிப். 1 முதல் புதுச்சேரியில் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள யூனியன் பிரதேசங்களின் மின்துறைகள் தனியார் மயமாகின்றன. அரசு ஊழியராகத் தொடர உத்தரவாதம் தராததால் வரும் பிப்ரவரி 1 முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக புதுச்சேரி மின்துறையினர் இறுதி முடிவை அறிவித்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையைத் தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதைக் கண்டித்து புதுவை மின்துறைப் பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார் மய எதிர்ப்புப் போராட்டக் குழுவை உருவாக்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மின்துறையைத் தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் மின்துறைப் பொறியாளர்கள், ஊழியர்களுடன் மின்துறைச் செயலர் மூலம் சாதக, பாதகக் கருத்துகளைக் கேட்டறிவது என முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அக்கூட்டத்தில் மின் ஊழியர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இன்று மாலை மின்துறையில் தனியார் மயம் மற்றும் பணிப் பாதுகாப்பு தொடர்பாக கருத்துக் கேட்பு விளக்கக் கூட்டம் நடந்தது. மின்துறை தலைமை அலுவலகத்தில் மின்துறை சார்பு செயலர் முருகேசன், தலைமைக் கண்காணிப்புப் பொறியாளர் சண்முகம், சிறப்பு அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோர் முன்பாக நடந்த இக்கூட்டத்தில் மின்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். "யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. போராட்டம் நடத்தினால்தான் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்" என்றனர். கூட்டத்தில் பங்கேற்றோர் மின்துறை தனியார்மய முடிவை அரசு கைவிடக்கோரி எதிர்ப்பு அட்டையை எடுத்துக் காண்பித்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு மின்துறைப் பொறியாளர்கள்-தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் அருள்மொழி, பொதுச் செயலர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாகக் கூறுகையில், "மின்துறை அரசுத் துறையாகவே தொடர வேண்டும் என்று கோரினோம். அவர்கள் விளக்கம் தந்தனர். அந்த விளக்கத்தில், மின்துறை ஊழியர்கள் அரசு ஊழியராகத் தொடர எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. அரசு ஊழியராகத்தான் பணிக்கு வந்தோம். அரசு ஊழியராகவே பணி ஓய்வு பெறுவோம். அதனால் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்குச் செல்ல இறுதி முடிவு எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.