பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து சிறுமி இறந்ததைத் தொடர்ந்து அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்து வதில் இருக்கும் சிரமங்களைத் தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு சென்னை புறநகரான சேலை யூரில் உள்ள தனியார் பள்ளிக்கூட பஸ்சில் பயணம் செய்த 7 வயது சிறுமி ஸ்ருதி, பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தார். இந்த சம் பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கூட பஸ்களுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அரசும் புதிய விதிமுறைகளை வகுத்து அறிவித்தது. அந்த விதிமுறைகளில் சிலவற்றை எதிர்த்து பள்ளிகள் சங்கம் மற்றும் சில பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கு விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் “பள்ளிக்கூட பஸ்சில் படிக்கட்டு மிக தாழ்வாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றினால் ஸ்பீடு பிரேக்கரை கடக்கும்போது படிக்கட்டு அதில் மோதும். அவசர கால வழியை பஸ்சின் பின்புறம் வைக்கச் சொல்வது பாதுகாப்பாக இருக்காது. பஸ் ஓட்டுநருக்கு தனி கேபின் வைப்பதால், அவசர காலத்தில் ஓட்டுநர் எழுந்து வந்து மாணவர்களுக்கு உதவ முடியாமல் போகும். எனவே, இந்த விதிமுறை கள் சட்டத்துக்கு முரணாக இருக்கின்றன” என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோர் கொண்ட முழு அமர்வு விசாரித்தது. அப்போது, “அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன? அதற்கு எப்படி தீர்வு காணலாம்? என்ற விவரங்களை மனுதாரர்கள் தரப்பு மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான், அதுகுறித்து அரசுக்கு நாங்கள் தெரிவிக்க வசதியாக இருக்கும்” என்று தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
2012-ம் ஆண்டு சென்னை புறநகரான சேலையூரில் உள்ள தனியார் பள்ளிக்கூட பஸ்சில் பயணம் செய்த 7 வயது சிறுமி ஸ்ருதி, பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தார்.