தமிழகம்

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஊழல்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டபினபு ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500-ஐ மாநில அரசு அளித்தது. அப்போது அந்த தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று கோரிய இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் அளித்துள்ளார். முழுக்க முழுக்க கலப்படமான பொருட்களை வழங்கியுள்ளனர். பொங்கல் தொகுப்பு வழங்க செலவிடப்பட்ட ரூ.1,800 கோடியில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. எனவே, இதை புரிந்துகொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவைப் புறக்கணிக்க வேண்டும்.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு டெல்லியில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கோ, அரசியலுக்கோ இதில்தொடர்பு இல்லை. இருப்பினும், பொங்கல் தொகுப்பு பிரச்சினையைமறைக்கவும், மக்களை திசை திருப்பவும் திமுகவினர் நடத்தும் நாடகம் இது. மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தபோது குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, ஏன் இவர்கள் குரல் எழுப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT