சென்னை: நடிகை விஜயலட்சுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரி நாடாரை பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, கடந்த 2020ஆம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் பரவிய இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக, பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின் விஜயலட்சுமி, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ஹரி நாடார் உள்ளிட்டோர் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரி நாடார் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரைக் கைது செய்த திருவான்மியூர் போலீஸார், இன்று சைதாப்பேட்டை 18-வது பெருநகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி சுப்ரமணியன், ஹரி நாடாரை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். ஹரி நாடாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு தொடர்பாக நாளை காலை விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, ஹரி நாடார் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.