பிரதிநிதித்துவப்படம். 
தமிழகம்

புதுச்சேரியில் புதிய உச்சம்; 3 ஆயிரத்தை நெருங்கிய கரோனா தினசரி பாதிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய உச்சமாக கரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 20) வெளியிட்டுள்ள தகவலில்: ''புதுச்சேரி மாநிலத்தில் 6,444 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 2,230, காரைக்கால்- 462, ஏனாம்- 68, மாஹே- 23 என மொத்தம் 2,783 (43.19 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,897 ஆக உயர்த்துள்ளது. இறப்பு விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 342 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஜிப்மரில் 49 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 32 பேரும் என 81 பேர் புதுச்சேரியிலும், 36 பேர் காரைக்காலிலும், 12 பேர் ஏனாமிலும், 15 பேர் மாஹேவிலும் என 144 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,909 பேர் என மொத்தமாக 13 ஆயிரத்து 53 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதன் மூலம் மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,073 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 392 (89.71 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9 லட்சத்து 13 ஆயரித்து 761 பேருக்கும், 2-வது டோஸ் 5 லட்சத்து 94 ஆயிரத்து 524 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 3,951 பேருக்கும் என மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 236 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.''

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் 7 மாதங்களுக்கு பிறகு கடந்த 18-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,093 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவே தினசரி பாதிப்பின் அதிகபட்டசமாக இருந்தது. தற்போது இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT