பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். (அடுத்த படம்) ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் கீழவாசல் பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள். 
தமிழகம்

5 நாட்களுக்கு பிறகு அனுமதி; பழநி, ராமேசுவரம் கோயில்களில் தரிசனத்துக்கு திரண்ட பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்

செய்திப்பிரிவு

பழநி/ராமேசுவரம்: கடந்த 5 நாட்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பழநி தண்டாயுதபாணி சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில்களில் நேற்று ஏராளமான பக்தர்கள்நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பழநி தைப்பூசத் திருவிழா கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பழநி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் கடந்த 14-ம் தேதிமுதல் 18-ம் தேதி வரை அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டதால் பாத யாத்திரையாக வந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தைப்பூசத் திருவிழாவின் நிறைவாக நாளை இரவு தெப்பத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. இதையடுத்து அன்று இரவு கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவுபெறும்.

ராமேசுவரம்

இதேபோல் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் வட மாநிலத்தவர்களும், ஏராளமான தமிழக பக்தர்களும் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT