தமிழகம்

நடிகை விஜயலட்சுமி விவகாரம்; பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் கைது: சென்னை அழைத்து வருகிறது தமிழக போலீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று அவரை சென்னை அழைத்து வருகின்றனர்.

நடிகர் விஜய், சூர்யா நடித்த ‘ப்ரெண்ட்ஸ்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கூறி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் சீமானின் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று கூறி தன் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜயலட்சுமி, 2020 ஜூலையில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விஜயலட்சுமி தர்ணாவில் ஈடுபட்டார். உடல் நலம் சரியாகாத நிலையில் மருத்துவமனையிலிருந்து திடீர் என்று என்னை வெளியேற்றி விட்டனர். சீமானுக்காக ஹரி நாடார் என்னை மிரட்டுகிறார். எனவே, சீமான் மற்றும் ஹரி நாடாரை போலீஸார் கைது செய்ய வேண்டும் என விஜயலட்சுமி கூறினார். மேலும், இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக திருவான்மியூர் போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். தற்போது வழக்கு ஒன்றில் சிக்கி பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதிக்கவேண்டும் என பெங்களூரு போலீஸாருக்கு சென்னை திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் அண்மையில் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், பெங்களூரு சென்ற திருவான்மியூர் போலீஸார் அவரை கைது செய்ததற்கான வாரண்டை அம்மாநில போலீஸாரிடம் அளித்தனர். இதையடுத்து ஹரிநாடார் இன்று சென்னை அழைத்து வரப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

SCROLL FOR NEXT