பல்லாவரம்: ஆலந்தூர், பல்லாவாரத்தில் பாதாள சாக்கடை, எரியூட்டு தகனமேடை தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட திடீர் பள்ளம் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரத்தை அடுத்த கீழ்க்கட்டளையில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் எரியூட்டு தகன மேடை புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக நாள்தோறும் 100 எம்எல்டி கூடுதலாக சேர்ந்து 1,000 எம்எல்டி குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், செம்பரம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்தால் 538 எம்எல்டி குடிநீர், சென்னைக்கு கிடைக்க வேண்டும். ஆனால், பல்வேறு பகுதிகளில் புதிய சாலை திட்டப் பணிகளால் 240 எம்எல்டி குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் முழு அளவில் பணிகள் நிறைவுபெறும் நிலையில் சென்னைக்கு செம்பரம்பாக்கம் கூட்டு குடிநீர் கிடைக்கும்.
அதுபோல் ஆலந்தூரில் இன்று, பாதாள சாக்கடை சிமென்ட் குழாய்கள் உடைந்துள்ளதால் ஏற்பட்ட பள்ளங்களை பார்வையிட்டேன். அதற்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 14 கிமீ தூரத்துக்கான புதிய இரும்பு குழாய்கள் பதிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, அப்பணி விரைவில் செயல்படுத்தப்படும்.
கீழ்க்கட்டளையில் உள்ள தகனமேடை இன்னும் ஒரு வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் அதேபோல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகிய இடங்களிலும் எரியூட்டும் தகன மேடை புதுப்பிக்கப்பட்டு எரிவாயு தகன மேடையாக விரைவில் மாற்றப்படும். மேலும், கிழக்கு தாம்பரத்திலும் புதியதாக எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
“உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவியிடத்துக்கு நேர்முக தேர்தலாக நடத்தப்படுமா அல்லது மறைமுக தேர்தலா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எத்தனை கட்டமாக தேர்தலை நடத்துவது என்பது தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்” என்று அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்) இ.கருணாநிதி (பல்லாவரம்) மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.