சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள மொளச்சூர் முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய சசிகலா. (அடுத்த படம்) முருகப்பெருமானுக்கு சசிகலா காணிக்கையாக வழங்கிய வெள்ளிக் கவசம். 
தமிழகம்

மொளச்சூர் முருகன் கோயிலில் சசிகலா வழிபாடு: ரூ.35 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசங்கள், தங்க கண் மலர்கள் காணிக்கை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் முருகன் கோயிலில் நேற்று சசிகலா வழிபாடு நடத்தினார். அப்போது அவர் ரூ.35 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசங்கள் மற்றும் தங்க கண் மலர்களை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மொளச்சூரில் பிரசித்தி பெற்ற வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலில் தைப்பூசதிருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.

கரோனா வழிகாட்டு விதிமுறைகளின்படி தைப்பூச தினமான நேற்று முன்தினம் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் கோயிலுக்குள் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து தைப்பூசத்துக்கான மேலும் சில சிறப்புபூஜைகள் நேற்று நடைபெற்றன.

இந்த சிறப்பு பூஜையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் வள்ளி,தெய்வானையுடன் அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் 4 அடி உயரமும், 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கினார். அருகில் இருந்த பொன்னியம்மன் கோயிலிலும் தரிசனம் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக மொளச்சூரில் பெருமாள் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் 1,000 பேருக்கு 10 கிலோ அரிசியை நிவாரண உதவியாக வழங்கினார். குழந்தைகளுக்கும் சாக்லேட்கள் வழங்கினார்.

இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போதுஅதிமுக கொடி கட்டிய காரில் வந்ததால் இந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT