விழுப்புரம் சாலமேட்டில் புதிதாக போடப்பட்ட சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு மூடப்பட்ட பள்ளம். 
தமிழகம்

விழுப்புரம் நகராட்சியில் 7 மாதங்களுக்கு முன் ரூ.84 கோடியில் போடப்பட்ட சாலைகள் மீண்டும் தோண்டப்படும் அவலம்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் நகராட்சியில் 17.90 கி.மீ தொலைவுக்கு கூடுதல் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொள்ள ஜனவரி 2020 அன்று அரசு ரூ. 251.67 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம், சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அரசியல் குறுக்கீடு காரணமாக சாலைப் பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டியது. இதனால் பாதாள சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் சாலை மேம்படுத்தும் பணிகள் 2021 ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்து நடந்தது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தற்போது பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால் ரூ. 84 கோடி மதிப் பீட்டில் போடப்பட்ட சாலைகளை தோண்டி குழாய் பதிக்கும்பணியை மேற்கொண்டு வருகிறது.சாலைகள் போடப்பட்ட 7 மாதத்திற்குள்ளாகவே, மீண்டும் அந்த சாலைகள் தோண்டப்படுகிறது. இதனால் நகர் பகுதிகள் முழுவதும் குண்டும் குழியுமாக இருப்பதாக விழுப்புரம் நகர வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் நகராட்சிப் பொறியாளர் ஜோதிமணியிடம் கேட்டபோது, “பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அரசாணை பிறப்பித்த போதிலும், அது இவ்வுளவு சீக்கிரம் செயல்படுத்தப்படும் என எங்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் தற்போது முழு வீச்சில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொண் டுள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT