பெரம்பலூரில் நேற்று சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை கம்பன் நகரைச் சேர்ந்த வர் வைத்தியலிங்கம்(55). இவர், சாலையோரம் உள்ள தனக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையை கடைகளாக மாற்ற ஏற்பாடு செய்து வந்தார். இதற்காக, வேறு இடத்தில் இருந்து கட்டிட இடிபாடுகளில் உள்ள மண், கற்களை அள்ளிவந்து, மாட்டுக் கொட்டகையில் குவியலாக கொட்டி வைத்திருந்தார். இந்த மாட்டுக் கொட்டகையின் சுவர் ஹாலோ பிளாக் கற்களால் ஆனது.
இந்நிலையில், வைத்தியலிங்கத் தின் மனைவி ராமாயி(44), வைத்திய லிங்கத்தின் அண்ணன் கலிய பெருமாள் மனைவி கற்பகம்(55), மாமியார் பூவாயி(70) ஆகியோர் நேற்று மாலை மாட்டுக்கொட்டகை சுவரின் ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மாட்டுக் கொட்டகையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண் குவியல் எதிர்பாராதவிதமாக சரிந்ததில் ஹாலோ பிளாக் சுவர் இடிந்து விழுந் தது. இதில், சுவரோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 3 பெண்களும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்டனர். இதில், ராமாயி, கற்பகம் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பூவாயி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிதுநேரத்தி லேயே சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.