தமிழகம்

விவசாய நிலங்களில் கெயில் திட்டத்தை தடுக்க நடவடிக்கை: தருமபுரியில் ஜெயலலிதா வாக்குறுதி

செய்திப்பிரிவு

தருமபுரியில் 11 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா, விளைநிலங்களில் எரிவாயுக்குழாய் பதிக்கும் கெயில் திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் தனது பிரச்சார பயணத்தை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா அடுத்ததாக விருத்தாசலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தருமபுரியில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

வாக்கு சேகரிப்பு:

"கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கடந்த 2011 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அதை தவிர அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் போன்ற திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் சொன்னதைச் செய்தேன்.. சொல்லாததையும் செய்திருக்கிறேன். எனவே, தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும். அதற்கு வாக்காளார்கள் அதிமுகவையும், அதன் தோழமை கட்சிகளையும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்" என வாக்கு சேகரித்தார்.

கெயில் திட்டம் - முதல்வர் விளக்கம்

"விவசாயிகள் நலனை பாதிக்கும் கெயில் திட்டம் கூடாது என தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. ஆனால், கெயில் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அத்திட்டத்துக்கு அனுமதி பெற்றுள்ளது.

விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார். (குறிப்பு: ரூ.3,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் கெயில் திட்டத்தின்படி, தமிழகத்தில் 504 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கப்படுகிறது. இத்திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 134 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.)

கருணாநிதி மீது விமர்சனம்:

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். கடந்த இரண்டு பிரச்சார பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடியது போலவே, இக்கூட்டத்திலும் கருணாநிதியை விமர்சித்தார்.

’மதுவிலக்கை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் கருணாநிதியும் திமுகவும் பேசக்கூடாது’ என்றார்.

தொகுதி பாகுபாடின்றி நலத்திட்டங்கள்:

தருமபுரியில் செயல்படுத்தபட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்ட ஜெயலலிதா, அதிமுக தொகுதி, திமுக தொகுதி என்ற பாகுபாடில்லாமல் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகக் கூறினார்.

’மக்களால் நான், மக்களுக்காகவே நான்; உங்களால் நான், உங்களுக்காகவே நான்’ என்ற வாசகத்தோடு வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பிரச்சாரத்தை நிறைவு செய்தார் ஜெயலலிதா.

SCROLL FOR NEXT