திமுக ஆதரவு தொலைக்காட்சிகளில் முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கை தொடர்பான விவரங்களை போட்டு, ‘சொன்னீங்களே செஞ்சீங்களா..’ என்ற கேள்வியுடன் விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாநில இணைச் செயலாளர் வி.ஆர்.திருநாரணன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘திமுகவுக்கு சொந்தமான டிவி சேனல்களில், முதல்வர் ஜெயலலிதா படத்துடன், ‘சொன்னீங்களே.. செஞ்சீங்களா..’ என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.
இந்த விளம்பரம் வாக்காளர்களை திசைதிருப்பும் வகையில் அமைந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, ‘‘டி.வி.யில் 17 விளம்பரங்கள் வெளியிடப்படுவது தொடர்பாக அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளனர்.
இந்த மனு தற்போது இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பார்கள்’’ என்றார்.