சென்னை: தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா சிறப்பாக நடத்திற்காக எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள் அன்ற தமிழக அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அன்றைய தினம் தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையும் தமிழக அரசு கொண்டாடியது.
இதுகுறித்து எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவினை அரசு சார்பில் ஏற்பாடு செய்து, அவ்விழாவில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக பணியாற்றிய எம்.ஜி.ஆரின் ஆட்சி சிறப்பினையும், எம்.ஜி.ஆருக்கு, கருணாநிதியுடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்த நல்ல நட்பினையும் எடுத்துரைத்து, எம்.ஜி.ஆர் பிறந்தநாளை சிறப்பித்தமைக்கு, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் மற்றும் தொண்டர்கள் சார்பிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர். ரசிகர்களின் சார்பிலும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆர்.எம். வீரப்பன் தெரிவித்துள்ளார்.