தமிழகம்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்தம்

செய்திப்பிரிவு

நூல் விலை உயர்வு, பஞ்சு பதுக்கலை கண்டித்து திருப்பூர் பின்னலாடைத்துறையினர் சார்பில் நேற்று முன்தினம் உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது. நேற்று 2-ம் நாளாக போராட்டம் தொடர்ந்தது.

திருப்பூரில் காந்திநகர், அங்கேரிபாளையம், அனுப்பர்பாளையம், பெரியார் காலனி, பல்லடம் சாலை,ஊத்துக்குளி சாலை, அவிநாசிசாலை உட்பட மாநகர் மற்றும்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், பிரிண்டிங், டையிங் நிறுவனங்கள், தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இப்போராட்டத்தால் கடந்த இரு நாட்களில் மட்டும் ரூ.400 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

ரயில்நிலையம் முற்றுகை

இதேகோரிக்கையை வலியுறுத்திபின்னலாடைத் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா) சார்பில்,சங்கத் தலைவர் அகில் ரத்தினசாமி தலைமையில் தொழில் துறையினர் நேற்று காலை ரயில்நிலையம் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் தடுத்ததால், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT