தமிழகம்

பிஐஎஸ் தரக்குறியீடு இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட: ரூ.10 லட்சம் மதிப்பிலான பொம்மைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பிஐஎஸ் தரக்குறியீடு இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), சென்னை கிளை 1- ன் அதிகாரிகள் குழு, வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள பொம்மைக் கடையில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அப்போது, மின்சார மற்றும் மின்சாரம் அல்லாத பொம்மைகள், ட்ரோன்கள், லெகோஸ் போன்ற பிஐஎஸ் தரக்குறியீடு இல்லாமல் சுமார் 630 பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக் கப்பட்டு, அவை அனைத்தும் பறி முதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இந்தக் குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே, பொம்மைகள் தரக் கட்டுப்பாடு ஆணை 2020-ஐ மீறுவது குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், பிஐஎஸ் செயலியை ( BIS CARE APP) பயன்படுத்துவதன் மூலமோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ புகார்கள் அளிக்கலாம் என இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT