தமிழகம்

பிரச்சாரம் தொடங்கியதால் வெறிச்சோடிய போயஸ் கார்டன்

செய்திப்பிரிவு

பல நாட்களாக பரபரப்பாக காணப்பட்ட போயஸ் கார்டன் பகுதி நேற்று வெறிச்சோடியது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல், கடந்த மாதம் 2 கட்டங்களாக தொடர்ந்து நடந்தது. தினசரி பல்வேறு தொகுதிகளில் இருந்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வந்து குவிந்தனர். இது தவிர விருப்ப மனு அளித்தும் அழைக்கப்படாத பலரும் தங்களை முதல்வர் அழைக்கமாட்டாரா என காத்திருந்தனர். இவர்களை தவிர, சில கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால், போயஸ் தோட்ட சாலைகளில் வாகனங்களும் கரை வேட்டிகளும் நிரம்பி காணப்பட்டன. அதன் பின், 4-ம் தேதி பட்டியல் வெளியானதும், அன்று மாலை முதல் வேட்பாளர்கள் பூங்கொத்துடன் முதல்வர் இல்லத்தில் வாழ்த்து பெறச் சென்றனர். தொடர்ந்து கடந்த 3 தினங்களாக, வேட்பாளர்களை மாற்றக் கோரி பலர் மனுக்களை அளிக்க வந்ததால், தொகுதி மக்களால் போயஸ் தோட்ட சாலை பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் நேற்று போயஸ் தோட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மட்டும் பூங்கொத்துடன் நேற்று முதல்வர் இல்லத்துக்கு வந்து சென்றனர். அதே நேரம், அதிமுக பிரச்சார வாகனங்கள், போயஸ் தோட்ட பகுதியை சுற்றி வருகின்றன.

SCROLL FOR NEXT