சென்னை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறக்கூடிய அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் எந்தெந்த மாநிலங்கள் சார்பில், எந்தெந்த அமைச்சகங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.
இந்த அணிவகுப்பில் இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசின் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 3 கூட்டங்களில் இதுகுறித்துப் பரிசீலனை செய்யப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை என்பது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சில காரணங்களால் இது தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமில்லை, 29 மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் 12 அலங்கார ஊர்திகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. அலங்கார ஊர்தி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அலங்கார ஊர்திக்கு கடந்த 2017, 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இடம் அளிக்கப்பட்டிருந்தது'' என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.