பழனியில் தைப்பூசவிழாவை முன்னிட்டு மலைக்கோயில் அடிவாரம் கிரிவீதிகளில் திரண்ட பக்தர்கள் கூட்டம்.  
தமிழகம்

பழனியில் தைப்பூசத் திருவிழா: மலைக்கோயில் செல்ல அனுமதியில்லாததால் கிரிவல வீதிகளில் திரண்ட பக்தர்கள்

பி.டி.ரவிச்சந்திரன்

சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொண்டாட்டமாக, பாதயாத்திரையாக பழனி வந்த பக்தர்கள் மலைக்கோயில் செல்ல அனுமதியில்லாததால் கிரிவீதிகளில் காவடி எடுத்து ஆடிப்பாடி மலையடிவாரத்தில் வழிபட்டனர்.

முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதயாத்திரைக்குப் புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கும் முன்னரே மதுரை, கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கினர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. (இன்று) தை பவுர்ணமி நாளன்று தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் திரண்டனர். மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லாததால் மலையடிவாரம் வந்த பக்தர்கள் கிரிவீதிகளில் மலையைச் சுற்றிவந்து அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் வழிபட்டனர். நேற்று பக்தர்கள் பழனியில் திரண்டதால் கிரிவீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாகக் காணப்பட்டது.

மலைக்கோயில் கிரிவீதிகளில் காவடி எடுத்து ஆடிய பக்தர்கள்

தைப்பூசத்தேரோட்டம்:

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவீதிகளில் ஆடிவந்தனர். பலர் முகத்தில் அலகு குத்தி வேலுடன் வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பழனி சண்முக நதியில் பக்தர்கள் திரளாக முடிகாணிக்கை செலுத்தியதால் நதிக்கரையோரம் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழனி மலைக்கோயில் அடிவாரம், இடும்பன்கோயில், சன்னதி வீதி, சண்முக நதி, பெரியநாயகிம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் எங்கு நோக்கினும் காவி உடை அணிந்த பக்தர்கள் திரளாகக் காணப்பட்டனர். பழனி நகரமே பக்தர்கள் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டிருந்தது.

தைப்பூச விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற முகக்கவசம் அணியாத பக்தர்களுக்கு இலவசமாக முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வைக்கப்பட்டிருந்த உணவு பாதுகாப்பானதாக உள்ளதா என உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தைப்பூச விழாவிற்குப் பல ஆண்டுகளாகப் பாதயாத்திரையாக பழனிக்கு வரும் பக்தர்கள், முதன்முறையாக இந்த ஆண்டுதான் மலைக்கோயில் மேல் உள்ள தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்காமல் ஊர் திரும்புகிறோம் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT