மதுரை: ''ஜெயலலிதா நிரந்தரம் இல்லாததுபோல் மோடியும் நிரந்தரம் இல்லை'' என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை வழியாக சென்னை செல்லும் வழியில் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
குடியரசு தின விழாவில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் பங்கேற்பில் தமிழகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே?
தமிழகம் மட்டுமல்ல கேரளா உள்ளிட்ட 3 மாநில வாகனங்கள் டெல்லி அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இதற்காக அவர்கள் ஏன் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜகவிற்கு செல்வாக்கு இல்லை. கர்நாடகாவில் மட்டுமே ஆட்சியில் இருப்பதால் இதுபோன்று செய்கின்றனர்.
பஞ்சாப் முதல்வர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளதே?
தேர்தலை முன்னிட்டு அமலாக்கப் பிரிவு இதுபோன்ற சோதனைகள் செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்கத் திட்டமிடுகிறது. இது ஆளும் கட்சியின் வழக்கமான ஒன்றுதான்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவிலிருந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாற்று கட்சிக்குத் தாவுவது குறித்து?
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குக் காட்சி மாறுவது மியூசிக்கல் சேர் போன்று வழக்கமாக நடைபெறுகிறது.
கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதே?
இது தேவையில்லாதது. கரோனா தடுப்பூசியைக் கட்டாயமாகப் போட்டுக்கொள்ளவேண்டும். ஆஸ்திரேலியாவில் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிட்ச் கரோனா ஊசி செலுத்தாதனால் ஆட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் பிரான்சிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நான் இருமுறை தடுப்பூசி போட்டுள்ளேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. மருத்துவம் சார்ந்த துறைகளில் கேள்வி கேட்கக்கூடாது என்பது பொதுவான நடைமுறை.
மோடி நிரந்தர பிரதமர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது குறித்து?
நிரந்தரம் என்பது இங்கு எதுவுமே இல்லை. ஏற்கெனவே அவர்கள் நிரந்தரம் என்று கூறியது (ஜெயலலிதா) நிரந்தரம் இல்லாத நிலைதான் ஏற்பட்டது. இதேபோல் ''மோடி எங்கள் டாடி'' என்று கூறியவர்கள் தற்போது ''நிரந்தர பிரதமர்'' எனவும் கூறுகிறார்கள். இதுவும் நிரந்தரமில்லை.