வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாசுக்கு ஒருமுறை வாய்ப்புக் கொடுங்கள் என்று வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தொரப்பாடி கிராமத்தில் பாமக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
புதுப்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஜோதி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், ஆனந்தன், மதன்குமார், ஏழுமலை, பிரபாகரன், கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பரமசிவம் வரவேற்றார்.
கூட்டத்தில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள், முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லவில்லை.
இலவசம் என்ற பெயரில் தமிழக மக்களை இழிவுப் படுத்தி உள்ளனர். தமிழகத்தில் வீதிக்கு ஒரு மதுக்கடையை தொடங்கி, வீட்டுக்கு ஒரு குடிகாரரை உருவாக்கியுள்ளனர். ரேஷன் கடையில் கூட சாராயத்தை விற்பனை செய்வார்கள்.
தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுச் செல்ல முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள். அவர் டாக்டருக்கு படித்தவர். எந்தச் செயலையும் தொலைநோக்கு சிந்தனையுடன் செய்வார். உதாரணமாக, தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்ததைக் கூறலாம்.
அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளன. அவருக்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். அனைவருக்கும் சமமான இலவசக் கல்வி, விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்கள் வழங்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தலில் மாம்பழச் சின்னத்தில் வாக்களித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம்” என்றார்.