தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் போராடி டோக்கன் பெற்று சாதித்த கார்த்திக்

செய்திப்பிரிவு

மாடுபிடி வீரராக களமிறங்க முதலில் டோக்கன் கிடைக்காத நிலையில், அமைச்சரிடம் சொல்லி டோக்கன் பெற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்து சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வாகியுள்ளார் கார்த்திக்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளைப் பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.

இது குறித்து கார்த்திக் கூறியதாவது:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க எனக்கு முதலில் டோக்கன் கிடைக்கவில்லை. அமைச்சர் மூர்த்தியை சந்தித்து எனது ஆர்வத்தை தெரிவித்தேன். அவர் எனக்கு டோக்கன் கிடைக்க ஏற்பாடு செய்தார். கரோனா காலத்திலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தி எங்களைப் போன்ற வீரர்களை உற்சாகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சிறந்த காளையாக புதுக்கோட்டை கல்குறிச்சி தமிழ்ச்செல்வனின் காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. இது குறித்து தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

என் காளையின் பெயர் புல்லட். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக என் காளை பங்கேற்று வருகிறது. இந்தாண்டுதான் சிறந்த காளையாக தேர்வாகியுள்ளது. முதல்வர் சார்பில் முதல் பரிசாக கார் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா காலத்திலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்திய முதல்வருக்கு நன்றி என்றார்.

SCROLL FOR NEXT