வாணியம்பாடி மற்றும் நாட்றாம்பள்ளி பகுதியில் நேற்று நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 130 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, வட்டாட்சியர் மோகன் உட்பட வருவாய்த் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவர்கள் போட்டியில் கலந்து கொண்ட 200 காளைகளை பரிசோதனை செய்து சான்றளித்தனர்.
எருது விடும் விழாவில் மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் காயமடைந்தனர். முதலிடம் பிடித்த காளைக்கு ரூ.70 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த காளைக்கு ரூ.55 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த காளைக்கு ரூ.40 ஆயிரம் என மொத்தம் 25 வகையான பரிசுகள் வழங்கப்பட்டன. வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
நாட்றாம்பள்ளி அடுத்த கல்நார்சம்பட்டியில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 185 காளைகள் கலந்து கொண்டு ஒடின. விழாவில் 80-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.