தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளைப் பிடித்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு: உதயநிதி சார்பில் கார் பரிசளிப்பு 

செய்திப்பிரிவு

கி.மகாராஜன்/ என்.சன்னாசி

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளைப் பிடித்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. 8 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 1,020 காளைகள் களமிறக்கப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடிய 20க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 8-வது சுற்றில் அனுமதிக்கப்பட்டனர்.

இறுதியில் 21 காளைகளைப் பிடித்த மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளைப் பிடித்த அலங்காநல்லூர் ராம்குமார், 13 காளைகளைப் பிடித்த சிற்றாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 2-வது, 3-வது சிறந்த மாடுபிடி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விழாக்குழு சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை கல்குறிச்சி தமிழ்செல்வன் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசு பெற்றது. தமிழ்செல்வனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்தின் காளை 2-வது சிறந்த காளையாகவும், குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதியின் காளை 3-வது சிறந்த காளையாகவும் தேர்வு செய்யப்பட்டது.

2-வது சிறந்த காளைக்கு விழாக்குழு சார்பில் பைக்கும், 3-வது சிறந்த காளைக்கு மதுரை மேற்கு ஒன்றியத் தலைவர் வீரராகவன் சார்பில் பசுக்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த வீரர், சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் வழங்கினர்.

SCROLL FOR NEXT