கோப்புப் படம் 
தமிழகம்

சென்னை அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி பகுதி நேர செய்தியாளர்கள் பணி நீக்கம் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை : சென்னையின் அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி பகுதி நேர செய்தியாளர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

"சென்னை வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சி செய்திப்பிரிவுக்கு 6 மாவட்டங்களில் 8 பல் ஊடக செய்தியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பல்வேறு ஐயங்களும், அச்சங்களும் எழுந்துள்ளன!

சென்னை வானொலி, தொலைக்காட்சிக்கு 38 மாவட்டங்களிலும் பகுதி நேர செய்தியாளர்கள் உள்ளனர். பல் ஊடக செய்தியாளர்கள் நியமனத்தால் தாங்கள் படிப்படியாக பணி நீக்கப்படுவோம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களின் அச்சம் நியாயமானது ஆகும்!

பகுதிநேர செய்தியாளர்கள் என்ற பெயரில் அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்தப் பணியில் கழித்து விட்ட அவர்களை பணி நிலைப்பு செய்வதற்கு பதிலாக பணி நீக்கம் செய்ய நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல!

பல் ஊடக செய்தியாளர்கள் சென்னை செய்திப்பிரிவுக்கு தான் செய்திகளைத் தர வேண்டும். அதற்கு இந்தி தேவையில்லை. ஆனால், இந்தி மொழியறிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது!

பல் ஊடக செய்தியாளர்களை நியமிப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்பணிக்கு இந்தி கட்டாயம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். அதே நேரத்தில் பகுதி நேர செய்தியாளர்களை நீக்கக்கூடாது. அவர்களை படிப்படியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT