தமிழகம்

105-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: எம்ஜிஆர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் இன்று மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசுசார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திராவிட இயக்கத்தில்..

தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இலங்கை கண்டி அருகில் உள்ள நாவலபிட்டியில் 1917 ஜன.17-ம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் அவர் காந்தியவாதியாக இருந்தாலும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் தன்னை 1953-ல் இணைத்துக் கொண்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய எம்ஜிஆர், பின்னாளில் அதிமுக கட்சியை தொடங்கினார்.

கடந்த 1977-ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார்.

சத்துணவு உள்ளிட்ட திட்டங்கள்

முதல்வராக இருந்தபோது நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார். சத்துணவு திட்டம், 5-ம் உலகத் தமிழ் மாநாடு, பள்ளிமாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவசவேட்டி - சேலை வழங்கும் திட்டம்உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜன.17-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை கிண்டி தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் இன்று காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்குகின்றனர்.

SCROLL FOR NEXT